Sunday, November 30, 2008

475. பயங்கரவாதத்தின் இன்னொரு முகம் காட்டும் இணைய போலிகள்-by கி அ அ அனானி


மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவியது தெரிந்ததே.மும்பை நகருக்குள் நுழையுமுன் கடலில் 5 மீனவர்களைக் கொன்றும் அராஜகம் நிகழ்த்தியுள்ளனர். மும்பையில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் இருந்து வர்த்தகக் கப்பலில் மும்பை வந்துள்ளனர். வழியில் கடலில் சென்று கொண்டிருந்த "குபேர் " என்ற மீன்பிடி படகைக் கைப்பற்றி அதிலிருந்த 5 பேரில் 4 பேரை கொன்றுள்ளனர் . மீதமிருந்த ஒரு மீனவரை மும்பை கடற்கரையை நெருங்கும் சமயம் தலையைத் துண்டித்துக் கொடூரமாக கொன்றுள்ளனர். இவை அனைத்தையும் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் அமீன் கமால் விசாரணையின் போது கக்கியுள்ளான்.

மேலும் இந்தத் பயங்கரவாதி நாய்கள் மும்பை கடலோரப் பகுதியை நெருங்கும் போது கடற்படையினர் சிலர் பார்த்துள்ளனர்। அவர்களிடம் மாட்டி விடுவோமோ என்ற பயத்தில் குபேர் மீன்பிடி படகில் கிடைத்த, இந்து மதத்தினர் கையில் அணியும் சிவப்புக் கயிறை சிலரும் குங்குமத்தை சிலரும் அணிந்துள்ளனர்। ஆனால் அவர்கள் பயந்த படி கடற்படையினர் அவர்களை விசாரிக்காததால் திட்டமிட்ட படி தங்கள் இலக்கை அடைந்து தாக்குதலை நடத்தியுள்ளனர்।

உண்மை இப்படி இருக்க சில அன்னிய நாட்டு அடிவருடி நாய்கள், இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு துணை போகும் கயவர்கள் வந்தவர்கள் இந்துக்களாக இருக்கலாம் என்று திட்டமிட்டு செய்தி பரப்பத் தொடங்கியிருப்பது அதிர்ச்சியும் அருவருப்பும் உண்டாக்குகிறது। இதற்கு தமிழ் முதலான பல மொழி இணைய தளங்களில் உலா வரும் , மத வெறிக்காக தேசத்தையும்/இந்திய தேசியத்தையும் கா(கூ)ட்டிக் குடுக்கத் துணிந்த , சில புல்லுருவி நாய்களும் அடக்கம் என்பது மிகவும் வெட்க கரமானது, கேவலமானது, அவலமானாது। அதுவுமல்லாது இந்தப் புல்லுருவிகள் தமிழ் இணையத்தில் தமிழர்களின் ஆதரவு பெற தங்கள் இணைய பக்கங்களின் பெயர்களிலும் தங்களது இணைய புனைப் பெயர்களிலும் தமிழ், தமிழன் என்று இணத்துக் கொண்டு , தாங்களும் போலியாக சிவப்புக் கயிறணிந்து , குங்குமம் வைத்துக் கொண்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு சற்றும் சளைக்காத பயங்கரவியாதிகள் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

நேரடியாக ஆயுதங்களுடன் புகுந்து தாக்கிய பயங்கரவாதிகளை 3 நாட்களில் (183 + 14) உயிர்களைப் பலி கொடுத்தாவது அழித்து விட்டோம்। ஆனால் மறைமுகமாக இந்திய இறையாண்மைக்கு உலை வைக்கும், அதன் அடிப்படையையே கலகலக்க வைக்கும் இந்தப் போலிகளை என்ன பூச்சிக்கொல்லி கொண்டு அழிப்பது என்ற ஆதங்கம் மேலிடுகிறது। ஒரு வேளை இதுதான் ஜனநாயகத்துக்கு நாம் கொடுக்கும் அதிகபட்ச விலையோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

நேர்மையிலும் நியாயத்திலும் நம்பிக்கை கொண்ட இந்திய இசுலாமியர்கள் இது போன்ற கீழ்த்தரமான புல்லுருவிகளை இனம் கண்டு ஒதுக்குவதன் மூலமும், அருவருக்கத்தக்க இந்த ஜந்துக்களை வெளிப்படையாய் அடையாளம் காட்டி எதிர்க்க முன்வருவதன் மூலமும் மட்டுமே இந்திய ஜனநாயக நாட்டில் மத நல்லிணக்கம் தழைக்க முடியும்। மேலும் இது போன்ற பயங்கரவாதங்களும் , மதக்கலவரங்களும் அதன் மூலம் ஆதாயம் தேட முயலும் அரசியல் நாடகங்களும் அரங்கேறுவதைத் தடுக்க முடியும்.


இந்தியராய் ஒன்று படுவோம் । இந்த நாட்டைக் காப்போம்.


By கி அ அ அனானி

Friday, November 28, 2008

474. தியாகங்களுக்கு நாம் தகுதியானவர்கள் தானா? - கி அ அ அனானி

கி.அ.அ.அனானி கூறியிருக்கும் கருத்துகளோடு 100% ஒத்துப் போகிறேன். கீழே நான் கொடுத்துள்ள சுட்டியில் உள்ளதை வாசித்து விட்டு கி.அ.அ.அ மேட்டரை வாசித்தால், அவர் கோபத்தில் உள்ள நியாயம் புரியலாம் !
தாஜ் ஹோட்டலில் 24 மணி நேரம்
எ.அ.பாலா

*********************************************
நேற்று மும்பை தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த அதிரடித் தாக்குதலில் உயிரிழந்த ஹேமந்த் கர்காரே, விஜய் சலாஸ்கர் , அஷோக் காம்தே மற்றும் முகம் தெரியாத அந்த காவலர்களைப் பற்றி செய்தி கேள்விப்பட்ட போது நெஞ்சம் கனத்தது।அதுவும் தொலைக்காட்சியில் தீவிரவாதிகளை எதிர்க்க,வாழ்க்கையில் கடைசி முறையாக தன் கடமையை நிறைவேற்ற அவசர அவசரமாக பாதுகாப்பு உடை அணிந்தபடியே ஓட்டமும் நடையுமாக செல்லும் ஹேமந்த் கர்காரே மற்றும் சலாஸ்காரின் நிழல் படத்தைப் பார்க்கும் போது துளிர்த்த கண்ணீரை கட்டுப் படுத்த முயலவில்லை என்பதை சற்று கர்வத்துடனேயே சொல்லிக் கொள்கிறேன்.அவர் போன்ற கடமை வீரர்களின் வீரதீரங்களுக்கு நான் தலை வணங்கி அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன். I Salute their Bravery & Valour.


ஆனால் இதைச் சொல்லும் அதே சமயத்தில் இது போன்ற வீரத் தியாகங்களை மதிக்கத் தெரியாதவர்கள் நாம் என்பதும் கசப்பான உண்மை.மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாகிப் போனதாலேயோ என்னமோ நமக்கு சக மனிதர்களின் மேலுள்ள மதிப்பு குறைவு என்பதுதான் கசப்பான உண்மை. சுடப்பட்டு இறந்த காவலர்களின் உடல்களை இழுத்தும் தூக்கியும் அப்புறப் படுத்திய விதம் பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும்.அது போலவே இந்தக் காவல் அதிகாரிகளின் வீர தீரச் செயல்கள் சில நாட்களில் மறக்கப் பட்டுவிடும்.
2 மாதம் கழித்து இப்படி கடமைக்காக உயிர் விட்டவர்களின் குடும்பங்களின் நிலை என்ன என்பது பற்றி யாராவது யோசிப்போமா?கார்கிலில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் தகப்பன்களும், மனைவிகளும் அறிவிக்கப் பட்ட வேலைக்காகவும் மானியத்தொகைக்காகவும், நிலப்பட்டாவுக்காகவும் அலையும் அவலம் இன்றும் நடப்பது நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும் ?அதைப் பற்றி எவ்வளவு பேர் வருத்தப் பட்டிருப்போம்? மீண்டும் வெட்கத்துடனும் வேதனையுடனும் சொல்கிறேன் "வீரத் தியாகங்களை மதிக்கத் தெரியாதவர்கள் நாம்".

என்று நாம் "உண்மை" வீரத்தையும், தியாகத்தையும் மதிக்கக் கற்றுக் கொள்கிறோமோ அன்றுதான் 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒன்றல்ல ஓராயிரம் கர்காரேக்களும், சலாஸ்கர்களும், காம்தேக்களும் தோன்றுவார்கள்.

என்று நாம் தியாகத்தின் மதிப்பு தெரிந்து கொள்கிறோமோ அன்று மனித உயிரின் மதிப்பும் புரியும் .அப்போதுதான் உயிரைப் பறிக்கும் இது போன்ற தீவிரவாதத்திற்கெதிராக ஒருமித்த குரல்கள் உரக்க ஒலிக்கும். தீவிரவாதத்துக்கு துணை போகாமலும், பயந்து ஒதுங்காமலும் தைரியமாய் எதிர்க்கும் குணம் நம்மில் வளரும்.

."கடலைகளை எறிந்தால் குரங்குகள்தான் வரும்"-If you throw pea-nuts you will only get Monkeys என்பது கார்பரேட் வட்டாரங்களில் வேலைக்கு திறமையான ஆட்கள் கிடைப்பது பற்றி ஒரு சொலவாடை. இந்தத் தருணத்தில் அதுதான் ஞாபகம் வருகிறது. நாம் எப்போது தியாகத்தை உதட்டளவில் இல்லாது உண்மையாக மதிக்கிறோமோ அப்போதுதான் சட்டக் கல்லூரியில் பழிவாங்கலுக்காய் "மனிதர்கள்- மனிதர்களை" வெறி பிடித்த மிருகங்களைப் போல் வேட்டையாடிக் கொண்டிருந்த போது ,தடுக்கும் அதிகாரம் இருந்தும் கை கட்டி வாளாதிருந்த மந்திகள் கிடைக்காமல் நமக்கு அநியாயத்தை தைரியமாய் எதிர்க்கும் மனிதர்கள் காவலர்களாய் கிடைப்பார்கள்।
By
கி அ அ அனானி

473. மும்பைத் தாக்குதல் - Update

இப்பதிவு, டிவி வழி செய்திகள் கிடைக்கப் பெறாதவர்களுக்காக, கடைசியாக வந்த தகவல்களின்படி,

1. தாஜ் ஹோட்டலில் ஒரு தீவிரவாதி சுற்றிக் கொண்டிருக்கிறான். கிட்டத்தட்ட 10-15 விருந்தினர்கள் மீட்கப்பட வேண்டும். 2 வெடிச் சத்தங்கள் கேட்டன.

2. டிரைடண்ட்-ஓபரா ஹோட்டலிலிருந்து 50-க்கும் மேற்பட்டவர், NSG கமேண்டோக்களின் காலை ஆப்பரேஷனின் முடிவில் மீட்கப்பட்டனர். Hats Off to NSG ! ஒரு 6 மாத இத்தாலிக் குழந்தையும் அதில் அடக்கம். பெரும்பாலானவர்கள் அயல்நாட்டவர் தான். சில பிணைக்கைதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆபரேஷன் தொடர்ந்து கொண்ட்டிருக்கிறது. இன்னும் ஒரு 100 பேர் உள்ளே மாட்டிக் கொண்டிருக்கின்றனர்.

3. நாரிமன் இல்லத்தில், ஹெலிகாப்டர் மூலம் NSG / Naval கமேண்டோக்கள் காலையில் இறக்கி விடப்பட்டனர். மூன்றாம் தளத்தில் உள்ள தீவிரவாதிகளுடன் பயங்கரச் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. 4-5 இஸ்ரேலிய பிணைக்கைதிகள் இருக்கக்கூடும்.

4. இஸ்ரேல், இந்த கமேண்டோ ஆபரேஷனுக்குத் தேவையான (உத்திகள் சார்ந்த) ஆலோசனையையும், வேறு எந்த உதவியையும் தரத் தயாராக இருப்பதாக கூறியுள்ளது.

5. GoC தம்புராஜ், எல்லா இடங்க்களிலும் திட்டமிட்டபடி ஆப்பரேஷன் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார். எவ்வளவு கமேண்டோக்கள் கொல்லப்பட்டனர் என்ற தகவல் தர இயலாது என்றார். ஒரு NSG மேஜரும், சில வீரர்களும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்திய ராணுவ வழக்கப்படி, ஆபிசர்கள் முன்னின்று தங்கள் அணிவீரர்களை களத்தில் செலுத்துகின்றனர் !! இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஆபரேஷன் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. தீவிரவாதிகள் டீஷர்ட் அணிந்த 25-30 வயதினர் என்று தெரிகிறது.

6. பலரும், ஏன் ஒரு 12-15 தீவிரவாதிகளைக் கொல்ல/பிடிக்க தீவிரப் பயிற்சி பெற்ற கமேண்டோக்களுக்கு இவ்வளவு நேரம் ஆகிறது என்று புரியாமல் கேட்கின்றனர். சரியாக திட்டமிடவும், சிவிலியன் உயிரிழப்பு அதிகம் ஏற்படாத வகையில் முன்னேறவும் வேண்டியிருப்பதால், நேரம் தேவைப்படுகிறது.

எது எப்படியோ, I SALUTE THESE UNSUNG, NAMELESS BRAVE AND COURAGEOUS MEN FROM THE NSG(ARMY) !! இந்த உண்மையான ஹீரோக்களை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

எ.அ.பாலா

Also read: மும்பை பயங்கரம்

Thursday, November 27, 2008

472. மும்பை பயங்கரம் - கோர்வையில்லா எண்ணங்கள்

நேற்றிரவில் ஆரம்பித்த (தற்கொலைப்படை)தீவிரவாதத் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஹோட்டல்கள், ரயில் நிலையம், மருத்துவமனை, களிப்பிடம் என்று கிட்டத்தட்ட பத்து இடங்களில் ஒரே நேரத்தில் ஒரு ராணுவ படையெடுப்புக்கு இணையான திட்டம் தீட்டுதலோடு தாக்குதல் நடந்தேறியுள்ளது. கடைசியாக வந்த தகவல்களின்படி தாஜ் ஹோட்டலில் சிக்கியிருந்தவர்கள், கடுமையான துப்பாக்கிச் சண்டையின் முடிவில் மீட்கப்பட்டு விட்டார்கள். ஹோட்டலின் தளங்களில் 40 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. எஞ்சியிருந்த 4 ஃபியாதின் அரக்கர்கள் கமேண்டோக்களின் இறுதித் தாக்குதலில் பலியாயினர். தீவிரவாதிகளை மும்பைக் கரையில் இறக்கி விட்டதாக நம்பப்படும் MV Alpha என்ற வியட்னாமிய கப்பலை, கடற்படை ஹெலிகாப்டர்கள் துரத்திச் சென்றுள்ளதாகவும் ஒரு செய்தி வந்துள்ளது.

இக்கட்டானதொரு தேசியச் சூழலில், பிஜேபி இதை அரசியலாக்காமல் அரசோடு கை கோர்த்துள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. பிரதமரும், அத்வானி அவர்களும் ஒன்றாக மும்பை செல்ல இருப்பதாக செய்தி வந்துள்ளது. இந்த நேரத்திலாவது ஒற்றுமை பேணுவதின் அவசியத்தை உணர்ந்துள்ள அரசியல்வாதிகளுக்கு நன்றி. தீவிரவாத ஒழிப்புக் குழுவின் (ATS) தலைவர் ஹேமந்த் கர்காரே, விஜய் சலாஸ்கர், அஷோக் காம்தே ஆகிய தலைசிறந்த போலீஸ் அதிகாரிகள், தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் உயிர் நீத்தது தீவிரவாத எதிர்ப்புக்கு பேரிழப்பு.


இவர்களைப் போன்ற மூத்த அனுபவமிக்க ஆற்றல் மிக்க அதிகாரிகள், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். Leading by example என்பது எல்லா நேரங்களிலும் சரியான அணுகுமுறை ஆகாது. இவர்களின் உயிர் மதிப்பற்றது. தீவிரவாத ஒழிப்புக்கு இவர்களின் சீரிய பணி / தலைமைப்பண்பு நாட்டுக்கு மிக மிக அவசியம். அதனால், திட்டம் தீட்டுவதிலும், தங்களது அணி வீரர்களை வழி நடத்துவதிலும், இன்னும் பல அதிகாரிகளை உருவாக்குவதிலும் இவர்கள் பெரும்பங்கு ஆற்ற வேன்டியுள்ள சூழலில், முன் சென்று உயிரிழப்பதால் அவர்களுக்குக் கீழே பணியாற்றுபவர்கள் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் இழக்கின்றனர்!

காஷ்மீரத்து விடுதலையை முன்வைத்துத் தான் இத்தீவிரவாதிகள் இது போன்ற அக்கிரமச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என்பது தெளிவாக இல்லை. மும்பைத் தாக்குதலில் லஷ்கரின் கை இருப்பதாக கூறப்படுகிறது. டெக்கான் முஜஹிதீன் என்ற தீ.அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளது. இது ஹைதரபாத்திலிருந்து செயல்படுகிறதா ? காஷ்மீரில் ஒரு referendum வைத்து, அதன் அடிப்படையில் காஷ்மீரை பிரித்துக் கொடுக்கும் பட்சத்தில், அங்குள்ள அனைத்துத் தீவிரவாத இயக்கங்களும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரத் தாக்குதல்களை நிறுத்தி விடுமா ? பதில் தெரியவில்லை!

ஒன்று தெளிவாக உள்ளது. குறிப்பாக அயல்நாட்டினரை குறிவைத்திருப்பதை வைத்துப் பார்த்தால், தீவிரவாதிகளின் நோக்கம், ஒரு தீவிரமான பாதுகாப்பற்ற சூழல் இந்தியாவில் நிலவுகிறது என்ற எண்ணத்தை/அச்சத்தை அயல்நாட்டவர் மனதில் விதைத்து, அவர்களை இங்கே வரவிடாமல்/எந்த முதலீடும் செய்யவிடாமல் விரட்டி அடிப்பது தான். சுற்றுலா, வணிகம்,வர்த்தகம் என்று வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவை, பொருளாதார அளவில் வீழ்ச்சியடைய வைத்து நாசமாக்குவது தான் தீவிரவாதத்தின் குறிக்கோள். பாகிஸ்தானிய பொதுமக்களுக்கு இம்மாதிரி குறிக்கோள் இல்லாவிட்டாலும், யாருக்கும் கட்டுப்படாத பாகிஸ்தானிய உளவு ஸ்தாபனமான ISI-க்கு எல்லா தீவிரவாதித் தாக்குதல்களிலும் பெரும்பங்கு இருப்பதாகவே தோன்றுகிறது. ISI தனது இந்திய ஒழிப்புப் பணிக்கு காஷ்மீரை trigger-ஆக பயன்படுத்தி, தீவிரவாதத்திற்கு ஆள் பிடிக்கிறது.

தகவல் தொழில்நுட்பத்தில் சிகரம் தொட்டிருக்கிறோம். நிலவுக்கு விண்கலம் அனுப்பியிருக்கிறோம். Defence தொழில்நுட்ப ஆய்வின் மூலம், புதுசு புதுசாக வீரியமுள்ள ஏவுகணைகளை கண்டுபிடித்துள்ளோம். ஏன் தீவிரவாதம் சார்ந்த உளவுத் தகவல் சேகரிப்பதில், தற்காப்பு நடவடிக்கைகளில் கோட்டை விடுகிறோம் ??? இதற்கு அரசு சார்ந்த அமைப்புகளின் அதிகாரிகளையோ காவல் துறையையோ குறை சொல்ல முடியாது. அவர்களிடம் அர்ப்பணிப்பு இல்லை என்று ஒருபோதும் கூற முடியாது. சில கருப்பு ஆடுகள் எங்கேயும் உள்ளன தான். அவர்களுக்கு முழு அதிகாரம் அளித்து, அவர்களை சுதந்திரமாக பணியாற்ற விடுவதில்லை. கேடு கெட்ட அரசியல் தலையீடு எல்லாவற்றையும் குட்டிச்சுவராக்கி விடுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் தீவிரவாத ஒழிப்புக்கென்றே ஒரு அமைப்பை உருவாக்கி, அவற்றுக்கு முழுச் சுதந்திரம் அளித்து, அவை அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவதே ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.

இல்லையெனில், இது போன்ற தீவிரவாத அவலங்கள் நிற்காமல் தொடரும். நாமும் 3-4 நாட்கள் பதிவுகளிலும், டிவிட்டரிலும், சீரியஸாக விவாதம் செய்து விட்டு, இரங்கலை தெரிவித்து விட்டு, நமது டிவிட்டுகளில் மறக்காமல் ':-(' குறியைப் போட்டு விட்டு அவற்றை மறந்து விடுவோம், அடுத்த குண்டு வெடிப்பு நிகழும் வரை !!! இப்போதுள்ள சூழலைப் பார்த்தால், நமது எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ளவிருப்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

இன்னொரு விசயம். நம்மைச் சுற்றி இருக்கும் நாடுகளைப் பாருங்கள். சீனாவை நண்பனாக நினைக்கவே முடியாது, நாம் எவ்வளவு இணக்கமாக இருக்க முனைந்தாலும்! சரியான களவாணி நாடு. பங்களாதேஷ், பாக்கிஸ்தான், இலங்கை, நேபால் என்று எந்நேரமும் சண்டையும் குழப்பமும் நிறைந்த failed states வகையறா.

எ.அ.பாலா

Also read: இட்லிவடைப் பதிவு
நண்பன் ஷாஜியின் பதிவு

Sunday, November 23, 2008

471. ஜாதீயத்தில்/அரசியலில் ஊறிய சட்டக்கல்லூரி

சமீபத்தில் அம்பேத்கார் சட்டக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வன்முறை குறித்து இங்கே நிறைய பேசியாகி விட்டது. சற்றே தாமதமாய் தான் இதை எழுத முடிந்தது.

1. இந்த வன்முறைக்கு அரசியல்வாதிகளும் வழக்குரைஞர்களும் தான் மிக அதிக பொறுப்பேற்க வேண்டும், காவல் துறையை விட. சட்டக்கல்லூரி வளாகத்தை அரசியல் மைதானம் ஆக்கியது இவர்கள் தான். பெரும்பான்மையான வழக்குரைஞர்கள் ஏதாவது அரசியல் கட்சியை சார்ந்தே செயல்படுவதால், இம்மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே அரசியலின் (உருப்படாத) பால பாடங்களை கற்றுத் தேற கல்லூரி நாட்களை பயன்படுத்துகிறார்கள்.

2. முன்னர் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை/கல்லூரி நடவடிக்கை எனும் நிலை வரும்போது அதில் தலையிட்டு சமரசம் என்ற பெயரில் அம்மாணவர்கள் தண்டனையிலிருந்து தப்ப இவர்கள் உதவி செய்ததால், 'கொலையும் செய்வான் மாணவன்' என்ற நிலைக்கு அம்மாணவர்கள் செல்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை :( அப்படியிருந்தும், சட்டக்கல்லூரி மாணவர் மீது இந்த வருடம் மட்டும் 14 கேசுகள் பதியப்பட்டது !

3. மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய வழக்குரைஞர்கள் செய்யும் அராஜகத்தைப் பற்றி பேசாமல் இருப்பதே நலம் !

4. எது எப்படியோ, கடமை, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகிய விசயங்களை கடைபிடிக்க வேண்டிய குறைந்தபட்ச அவசியத்தை (தங்கள் காவலர் பயிற்சியில்) அறிவுறுத்தப்பட்ட காவல்துரையினரே ஒரு தீவிரமான குற்றம் தங்கள் முன்னால் நடந்தபோது வாளாவிருந்தது தான், பலருக்கும் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. எனக்கென்னவோ, சட்டசபைக் கூட்டம் நடைபெறும் சமயம், தாங்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்கப் போக, அது backfire ஆகக்கூடிய அபாயம் இருந்ததாக போலீஸ் எண்ணியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

5. விடுதியில் இருப்பவர்களில் பெரும்பாலானவர் தலித் மாணவர்கள். விடுதியில் அவர்கள் வைத்தது தான் சட்டம் என்ற நிலை நிலவுவதாக ஒரு புகார் இருப்பினும், தங்கள் கிராமங்களில் அம்மாணவர்களும், அவர்கள் குடும்பங்களும் ஒடுக்கப்பட்ட சூழலில் அனுபவித்த அவமானங்களும் இன்னல்களும் அவர்களை கடினப்படுத்தியிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இது உளவியல் சார்ந்ததொரு பிரச்சினை.

பெரு நகரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் கூட, அவர்கள் 'தொடத்தகாதவர்களாக' அவமானத்துக்கு உள்ளாகும்போது, (தேவர் ஜெயந்தி விழா அழைப்பிதழில் அம்பேத்கார் பெயரை விட்டது மட்டுமே காரணமாக இருக்கத் தேவையில்லை, அது ஒரு Trigger, அவ்வளவு தான்!!) அவர்களின் ஆற்றாமையும் கோபமும் collective aggression-க்கு வழிவகுத்து, வன்முறையில் முடிகிறது. அதனால், வன்முறை சரி என்று வாதிடவில்லை! ஆனால், அடிபட்டு மயங்கிச் சாய்ந்த ஒருவனை சிலர் தொடர்ந்து அடித்து உதைத்தார்கள் என்றால், எத்தகைய ஒரு கோபம் உள்ளே ஒரு எரிமலையாக கனன்று கொண்டிருந்திருக்க வேண்டும் என்பதை நினைத்தால் மிக்க அதிர்ச்சியாக இருக்கிறது :( அதோடு, தலித் மாணவர்களை சாதி வெறியர்கள் என்பது நகைமுரண் தவிர வேறில்லை. ஒடுக்கப்பட்டு சமூகக் கட்டமைப்பில் கடைநிலையில் உள்ளவர்களுக்கு எப்படி சாதி சார்ந்த திமிரோ கர்வமோ வெறியோ இருக்க முடியும் ?!?!?!?

பொறுப்பில இருப்பவர்களும் (அரசியல்வாதிகள்) பொறுப்பாக இருக்க வேண்டியவர்களும் (வழக்குரைஞர்கள்) பிரச்சினையை சரியான முறையில் அணுகி, மாணவர்களிடையே சமரசமும், நட்பும், கல்லூரியில் நல்ல சூழலும் நிலவ வழி செய்யாமல் சுயலாபத்துக்காக பிரிவினைக்கு தூபம் போடுவது யாருக்குமே நல்லதல்ல.

6। நல்லவேளை, அடிபட்ட மாணவர் யாரும் உயிரிழக்கவில்லை, பிரச்சினையும் பூதாகாரமாக உருவெடுக்கவில்லை! இது போன்றதொரு சாதீய வன்முறை ஒரு கல்லூரி வளாகத்தில் நிகழ்வது இதுவே கடைசியாக இருக்கட்டும்। தங்கள் ஆற்றலையும், நேரத்தையும் படிப்பில் செலவிட்டு தங்களை வாழ்வில் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ள மாணவர்கள் தேவையில்லாத அரசியல் தலையீட்டால் உருப்படாமல் போவது மிக்க வருத்தத்திற்கு உரியது। கல்வி ஒன்றே சமூகத்தில் தாங்கள் நல்ல நிலையை அடைய (சமத்துவத்தை பெற) வழி வகுக்கும் என்பதை மற்றவரை விட தலித் மாணவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டியது மிக அவசியம்.

7. இறுதியாக ஒரு விசயம். எந்த ஒரு பிரச்சினை என்றாலும், அரசுப் பேருந்துகளை உடைத்தும் நாசமாக்கியும் எதிர்ப்பை தெரிவிக்கும் பழக்கத்திற்கு சாவுமணி அடிக்க வேண்டும். மக்கள் வரிப்பணத்திலிருந்து அவை வாங்க்கப்பட்டவை என்பது கூட சிலபல மாணவ மரமண்டைகளுக்கே புரியவில்லை என்றால், பாமரர்களான கட்சித் தொண்டர்களுக்கு எப்படி புரியும் ?!?!? பொதுச்சொத்துக்கு நாசம் விளைவிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க்ப்படும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். அது பொடா அளவுக்கு இருந்தால் கூட பரவாயில்லை !!!!

எ.அ.பாலா

Wednesday, November 19, 2008

470a. வில்லத்தனத்தில் ஒரு சகாப்தம் - மஞ்சேரி நாராயண் நம்பியார்

தமிழ் சினிமாவின் "முதல்" & GRANDEST வில்லன் (நம்மாழ்வரை முதலாழ்வார் என்றழைப்பது போல!) எம்.என்.நம்பியார் இன்று காலமானார்.  அன்னாருக்கு வயது 89. 

அவர் இறந்த சேதியை டிவிட்டரில்  வாசித்தவுடன் ஒரு சோகம் தாக்கியது.  என்ன மாதிரி நடிகர், வில்லனாக எம்ஜியார் சிவாஜி, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ஜெமினி, கமல்(குரு!), ரஜினி என்று எண்ணிலடங்கா கதாநாயகர்களுக்கு வில்லனாக பல திரைப்படங்களில் பரிமளித்தவர் MN நம்பியார்.  கிட்டத்தட்ட 1000 திரைப்படங்களில் நடித்தவர்.  சபரி மலைக்கு 65 தடவை சென்றதால், மகா குருசாமி என்ற அந்தஸ்த்தைப் பெற்றவர்.  நிஜ வாழ்வில் மகா யோக்கியர், மகா யோகி !

இந்த சேதி கேட்டவுடன் 2 விசயங்கள் சட்டென்று நினைவில் பளீரிட்டது.  பாக்கியராஜின் தூறல் நின்னுப்
போச்சு படத்தில் அவரது நடிப்பு செம கலக்கலான நடிப்பும், எம்ஜிஆரிடம் ஒரு மூதாட்டி "ராசா
நம்பியாரிடம் ஜாக்கிரதையாய் இருந்துகொள்" என்றதும் (சுரதாவும் இதை டிவிட்டரில் சொன்னார்!!!).

ஆழ்ந்த அஞ்சலியும், அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகளும் !  ஐயப்பனுக்கு அருகேயே சென்று
விட்டார் அவர் !

எ.அ.பாலா

Sunday, November 16, 2008

469. அடிச்சுக்கிட்டு சாகட்டும் அப்படியே விடுங்க!

அடிச்சுக்கிட்டு சாகட்டும் அப்படியே விடுங்க!

முதல்வன் ஸ்டைலில் நடந்த நிஜம் ... சட்டக்கல்லூரியில் சிலையான போலீஸ்!


வன்முறையை முதலில் தெளித்தது எந்த சாதி? ரத்தத் தில் அதிகம் குளித்தது எந்த சாதி? இதுவல்ல பிரச்னை! புனிதமான கல்வி வளாகத்தினுள் கத்தியும், இரும்புக் குழாயும், உருட்டுக் கட்டைகளுமாக யுத்தத்தை அரங்கேற்றியிருப்பது, மாணவ சாதி! அதை சிலையாக நின்று வேடிக்கை பார்த்தது, போலீஸ் சாதி! இதுதான், 'இந்த சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?' என்ற கலவரத்தை ஏற்படுத்துகிறது!

சென்னை 'அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி'யில் கடந்த 12-ம் தேதி மாலையில் நடந்த கோர சம்பவம் மீடியாக்களின் வாயிலாக வெளியானதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த தமிழகமும் பதைபதைப்பின் பிடியிலிருந்து இன்னமும் மீளாமல் தவிக்கிறது! 'இரண்டு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்தான், வெறித்தனமான இந்தத் தாக்குதலுக்கு முக்கிய காரணம்' என்பது பதைபதைப்பைக் கணிசமாகவே கூட்டியிருக்கிறது.

தாக்குலில் படுகாயப்பட்ட பாரதி கண்ணன், ஆறு முகம், அய்யாதுரை ஆகிய மூன்று மாணவர்களும் சென்னை பொது மருத்துவமனையின் அடுத்தடுத்த படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டிருக்க... நாம் அங்கே விசிட் அடித்தோம்.

சட்டக் கல்லூரியின் நுழைவாயிலில் அடித்துத் துவைக் கப்பட்ட பாரதி கண்ணன் நைந்துபோய்க் கிடந்தார். ஒரு கையை கட்டித் தொங்கப் போட்டிருந்தார்கள். உடலில் காயம் இல்லாத இடமே இல்லை. பேசும் நிலையிலும் அவர் இல்லை. அங்கே இருந்த மாணவர்களிடம் பேசினோம். ''பெயர், போட்டோ போட்டுடாதீங்க...'' என்றபடி பேச ஆரம்பித்தார்கள்.

''பல வருடங்களாகவே சட்டக் கல்லூரியில் சாதி பிரச்னை மாணவர்களை சீரழிச்சுக்கிட்டு இருக்கு. ஹாஸ்டல் மாணவர்களுக்கும் ரெகுலர் மாணவர் களுக்கும் சச்சரவு வராத நாளே கிடையாது. எஸ்.சி. மாணவர்கள், எஸ்.சி. அல்லாத மாணவர்கள் என்று இரண்டு குழுக்களாகத்தான் செயல்படுறாங்க.

நாங்க 'முக்குலத்தோர் மாணவர் பேரவை' என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி செயல்பட்டுக் கொண்டிருந்தோம். தேவர் ஜெயந்தி அன்று அடிக்கப்பட்ட நோட்டீஸில் கல்லூரியின் பெயரான அம்பேத்கர் பெயரைப் போடவில்லை. சம்பவத்தன்னிக்கு மாலையில் செமஸ்டர் எக்ஸாம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், சாதி ரீதியான தேசிய கட்சி ஒன்றின் கொடி கட்டிய காரில் ஒரு கும்பல் கல்லூரிக்குள் வந்தது. அவர்கள் கல்லூரிக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாதவர்கள். அவர்கள் அந்தக் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரின் அடியாட்கள். அவர்கள்தான் இத்தனை அராஜகத்தையும் நடத்தினாங்க. அவர்களில் எங்கள் காலேஜ் ஓல்டு ஸ்டூடண்ட்ஸ§ம் இருந்தாங்க.

கல்லூரியின் இன்சார்ஜ் முதல்வரா இருக்கிற ஸ்ரீதேவ், ஏற்கெனவே விடுதியில் வார்டனா இருந்தவர். அவர் அனுமதி கொடுக்காமல் போலீஸ் கல்லூரிக்குள் வரமுடியாது. ஆனால், பிரின்சிபாலோ போலீஸை கூப்பிடவே இல்லை. போலீஸ் உள்ளே வர அவர் அனுமதித்திருந்தால், பிரச்னை இந்த அளவுக்குப் போகாமல் தடுத்திருக்கலாம். போலீஸ் இதில் தலையிடாது என்று தெரிந்தேதான் படிப்படியாகத் திட்டம் போட்டுக் காரியத்தைக் கனகச்சிதமாக அரங்கேற்றியிருக்கிறார்கள்'' என்று சீறினார்கள்.

மருத்துவமனை வார்டுக்கு வெளியே பாதிக்கப்பட்ட கொதிப்பும் சோகமுமாக நின்றிருந்தனர், மாணவர்களின் உறவினர்கள். அவர்களில் ஒரு பெண் அங்கே நின்றிருந்த போலீஸாரைப் பார்த்து, ''டி.வி-யில பாத்துட்டு ரத்தமே கொதிக்குதுய்யா... பாவிங்களா! உங்க பொண்டாட்டி புள்ளைங்கள இப்படி நாயைப் போல அடிச்சா இப்படி வேடிக்கை பாத்துக்கிட்டா இருப்பீங்க? உங்களுக்கு எல்லாம் எதுக்கு காக்கிச் சட்டை? கழற்றி நெருப்புல போடுங்க..!'' என ஆத்திரப்பட... போலீஸ் அதிகாரிகள் முதல் கான்ஸ்டபிள்கள் வரை 'சட்டக் கல்லூரி வாசல் போஸ்' போலவே அசையாமல் நின்றார்கள்.

சீறிய, லில்லி கல்பனா என்ற அந்தப் பெண்ணிடம் பேசினோம். ''இங்கே இருக்கிற தமிழனையே போலீஸ் தலையிட்டுக் காப்பாத்த முடியல... இலங்கைத் தமிழனுக்காகக் கண்ணீர் விடுறானுங்க, இந்த அரசியல்வாதிங்க! அடிமேல அடி விழுகுறப்ப மனிதாபி மானத்தோட காப்பாத்த முடியாத போலீஸை வெச்சு என்ன அரசாங்கம் நடத்தி என்ன பிரயோசனம்?'' என்று குமுறினார்.

தாக்கப்பட்ட மாணவர் பாரதிகண்ணனின் (கத்தியுடன் பாய்ந்து சென்று, கடைசியில் நையப் புடைக்கப்பட்டவர்) தந்தை கருப்பசாமியிடம் பேசினோம். ''தேவகோட்டைக்கு பக்கத்துல என் சொந்த ஊர். நல்லா படிக்கணும்னு சென்னைக்கு மகனை அனுப்பினேன். டி.வி-யில பாத்துட்டுத் துடிச்சுப்போய் வந்தேன். ஹைகோர்ட்டு, கோட்டை, சட்டசபை எல்லாம் நடந்துகிட்டு இருக்கிற எடத்துக்குப் பக்கத்துலேயே இவ்வளவு கொடூரம் நடந்திருக்கு! இதை எல்லாம் பாக்குறப்போ, 'நாம தமிழ்நாட்டுலதான் இருக்கோமா.. இல்ல வேறு எங்கேயோ இருக்கோமா'னு நினைக்கத் தோணுது. சாதி மோதல்தான் காரணம்னு சொல்லுறாங்க... எந்த சாதியா இருந்தாலும் ஆளுறவங்கதானே காப்பாத்தணும்!'' என்றார்.

மாணவர்களில் சிலரை முதல் கட்டமாகக் கைது செய்திருக்கும் நிலையில், எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த மாண வர்களோ, ''கிராமத்தைவிட்டு இங்கே படிக்க வந்தால், இங்கும் எங்களுக்கு எதிரான ஒடுக்குதல் தொடர்கிறது. அரசுத் தரப்பிலிருந்து எங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளைக்கூட கிண்டல் செய்கிறார்கள் சிலர். இதனால் எங்கள் தரப்பு மாணவர்கள் மத்தியில் எழும் குமுறலை, கல்லூரிக்கு வெளியே உள்ள சில சக்திகள் வசமாக விசிறிவிட்டு, தங்களுக்குச் சாதகமாகப் பல குழப்பங்களை அரங்கேற்றிக் கொள்கின்றன'' என்கிறார்கள்.

இப்போது சட்டக் கல்லூரி வளாகங்களில் போலீஸ் குவிக்கப்பட்டிருக்கிறது; கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படிருக்கிறது. இருந்தும் கல்லூரிக்குள் மாணவர்கள் கொஞ்சம் பேர் இருந்தார்கள். ஒரு சில பேராசிரியர்களும் இருந்தனர்.

''இவ்வளவு நடந்தும் நீங்களாக போலீஸை அழைக்க வில்லையே, ஏன்?'' என அவர்களிடம் கேட்டோம்.

அவர்களோ, ''தேவர் ஜெயந்தி விழா அன்னிக்கு நடந்த பிரச்னை மறுபடி எதிரொலிக்கும்னு எதிர்பார்த்தோம். நேத்து பரீட்சை நடக்கும்போது கண்டிப்பா குறிப்பிட்ட மாணவர்கள் வருவாங்கனு தெரிஞ்சே அந்தக் கும்பல் தயாரா காத்திருந்தது. இவங் களும், தங்கள் மீது தாக்குதல் நடக்கலாம்னு தெரிஞ்சு கையில் ஆயுதங்களோடுதான் வந்திருந்தாங்க. மோதல் உறுதினு புரிஞ்சுகிட்டு, பகல் இரண்டரை மணிக்கே போலீஸ§க்கு தகவல் அனுப்பிட்டோம். இதோ பாருங்க ஆதாரத்தை!'' என்று சொல்லி, ஐ.ஜி. அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட புகாரின் அக்னாலஜ்மெண்ட் நகலை எடுத்துக் காட்டினார்கள்.

அங்கே இருந்த மாணவர் களிடம் பேசியபோது, ''டிகிரி முடிச்சிட்டு வர்றவங்க இங்கே மூணு வருஷம் படிக்கணும். ப்ளஸ் டூ படிச்சிட்டு வர்றவங்க ஐந்து வருஷம் படிக்கணும். இதுல ஐந்து வருஷம் படிக்கிற மாணவர்களுக்குள்ளதான் பிரச்னை அவ்வப்போது வெடிக்கும். இப்ப நடந்த சம்பவத்தைவிட மோசமான தாக்குதல்கள்கூட எங்க காலேஜுல நடந்திருக்கு. போன வருஷம் மே மாதம் 28-ம் தேதி அன்னிக்கு விடுதிக்குள்ள நடந்த கொலைவெறித் தாக்குதல் இதைவிட மோசமானது. குறிப்பிட்ட ஒரு சாதி பையன் இரும்பு நாற்காலியை சத்தம் வரும்படி நகர்த்திப் போட்டான்னு பிரச்னையை ஆரம்பிச்சாங்க. ஏகப்பட்ட ஸ்டூடன்ட்ஸ§க்கு ரத்த காயம். ஹாஸ்டலுக்கு உள்ளேயே கத்தி, உருட்டைக் கட்டையெல்லாம் தயாரா பதுக்கி வச்சிருக்காங்க. இப்போதைய சம்பவத்தின்போதும், சுமார் அஞ்சு கிலோமீட்டர் தள்ளியிருக்கிற ஹாஸ்டலில் இருந்துதான் ஆயுதங்களை எப்படியோ காலேஜுக்குள் கொண்டாந்திருக்காங்க. மோதல்களுக்கான அடிப்படை எல்லாமே ஹாஸ்டலில் இருந்துதான் ஆரம்பிக்குது. இதை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தணும்னா பிற்படுத்தப்பட்ட சமூகத்து ஸ்டூடன்ட்ஸ§க்குத் தனியா விடுதி கொண்டு வரணும்'' என்றார்கள்.

கல்லூரி ஊழியர்களிடம் பேசினோம். ''மயங்கிய பிறகும் பாரதி கண்ணன் அடித்துத் துவைக்கப்பட்ட நுழைவாயிலுக்கு முன்பு இளங்கோ என்பவர்தான் வாட்ச் மேனா இருந்தார். அவரை மூணு மாதத்துக்கு முன்பு எழும்பூர் மருத்துவமனைக்கு மாத்திட்டாங்க. அவர் மீது அன்பும் மரியாதையும் எல்லா மாணவர்களுக்கும் உண்டு. அவர் இருந்திருந்தா... ஒருவேளை இந்தளவுக்குப் பிரச்னை வளர்ந்திருக்காது. உள்ளேயும் அப்படித்தான். பிரின்சிபால், புரொபசர் எல்லாம் தடுத்தபோதும் அவங்களை ஒருமையில் மிரட்டித் துரத்திய மாணவர்கள், கடைசியில் கேண்டீன்ல வேலை பார்க்கும் ஒரு பெரியவர் தடுத்த பிறகுதான் கொஞ்சம் அடங்குனாங்க. அவர் தன்னோட துண்டைத் தரையில் எடுத்துப்போட்டு, 'இதைத் தாண்டி யாரும் வரக்கூடாது... இது என் மேலே சத்தியம்'னு கட்டளை போட்டார். சோறு போட்ட அவர் பேச்சுக்குத்தான் மாணவர்கள் ஓரளவு அடங்கினாங்க!'' என்றனர்.

அடுத்து அவர்கள் சொன்னதுதான் அதிர்ச்சியின் உச்சம்-

''கேட் பக்கத்துல நிறைய போலீஸ்காரங்க நின்னாங்க. இங்கே நடக்கிற மோதல் பத்தி உடனுக்குடன் கமிஷனர் ஆபீஸ§க்குத் தகவல் சொல்லி இன்ஸ்ட்ரக்ஷன் கேட்டுக்கிட்டே இருந் தாங்க. அப்ப போலீஸ் மைக் கிலிருந்து யாரோ பெரிய அதிகாரியிடமிருந்து, 'உத்தரவு வரும் வரை எதுவுமே செய்ய வேண்டாம்... அந்த காலேஜ் பசங்களுக்கு இதே பொழைப்பா போச்சு. அடிச்சுக்கிட்டு சாகட்டும்... அப்படியே விடுங்கய்யா!'னு ஒரு தகவல் வந்துச்சு. கிட்டத் தட்ட 'முதல்வன்' படத்தில் வர்ற காட்சி மாதிரியேதான் அது இருந்தது!'' என்றனர் அவர்கள்.

நெருப்பாக விவகாரம் தகிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, உதவி கமிஷனர் உட்பட சஸ்பெண்ட் என்று அறிவித்த அரசாங்கம்... 'சம்பவ ஸ்தலத்தில் இருந்த போலீஸார் சும்மா வேடிக்கை பார்க்க என்ன காரணம்?' என்று சில தகவல்களை நம்பகமான வட்டாரங்களில் இருந்து கேட்டுப் பெற்றுக் கொண்டதாம். அதைத் தொடர்ந்து, சென்னை மாநகர கமிஷனராக இருந்த சேகரை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றி, அங்கே ராதாகிருஷ்ணனை நியமித்துள்ளது. சென்னை வடக்கு இணை கமிஷனராக இருந்த அபய் குமார் சிங் மாற்றப்பட்டு விட்டார். கூடுதல் போலீஸ் கமிஷனராக ஏ.கே.விசுவநாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார். சென்னை வடக்குபொறுப்பையும் அவர்கவனிப்பார். சில நாட்களுக்கு முன்பே துணை கமிஷனராக நியமிக்கப் பட்ட ஆசியம்மாளையும் அங்கிருந்து அகற்றி, பிரேம் ஆனந்த் சின்ஹாவை நியமித்துள்ளார்கள்.

இதற்கிடையே, சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறை வெறியாட்டம், சாதிய ரீதியில் தமிழகத்தின் மற்ற சில கல்லூரிகளுக்கும் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இப்போது பல்வேறு மாவட்டங்களிலும் போலீஸ் அலர்ட்!

காயப்பட்ட மாணவர்களை அ.தி.மு.க. தரப்பினர் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டுப் போக... ''இந்த அரசு முக்குலத் தோருக்கு ஏற்படும் இன்னல்களைக் களைவதில் அக்கறை காட்டுவதில்லை. போலீஸ் மெத்தனத்துக்கு சாதி ரீதியான காரணங்கள் உண்டு'' என்று சொல்லி சாதிய ரீதியான உண்ணாவிரதம், போராட்டம் போன்றவற்றுக்கும் சில அமைப்புகள் தயாராகி வருகின்றனவாம். இதில் மத்திய அமைச்சர் ஒருவரின் சகோதரர், எஸ்.பி-யாக இருந்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரும் அடக்கம்.

நன்றி: ஜுனியர் விகடன்

Saturday, November 15, 2008

468. வாழ்க நற்றமிழ் நாடு (அ) என்ன கொடுமை இது, பாரதி !!!மாற்றமும் முன்னேற்றமும் கைக்கெட்டிய தூரத்தில் தான் !

Thursday, November 13, 2008

467. எங்கே செல்லும் இந்தப் பாதை ?

சட்டக் கல்லூரி மாணவர்கள் பயங்கர வன்முறை


சென்னை சட்டக் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் உருட்டுக்கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்டனர். போலீசார் முன்னிலையில் நடந்த இந்த கொலை வெறித் தாக்குதலில், மூன்று மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை, அம்பேத்கர் சட்டக் கல்லூரியில், "செமஸ்டர்' தேர்வு நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது மாணவர்கள் சிலர் உருட்டுக்கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களுடன் உலவிக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்ததும், நூற்றுக்கணக்கான போலீசார் கல்லூரி முன் குவிக்கப்பட்டனர். மாணவர்களுக்குள் இத்தகவல் பரவியதும், யாரும் வெளியில் வரவில்லை. மாலை 5 மணியளவில் மாணவர்களில் ஒரு பிரிவினர் கையில் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டையுடன் கல்லூரியில் உலா வந்தனர். அவர்களைப் பார்த்ததும் மற்றொரு பிரிவினர், ஆயுதங்களால் பதில் தாக்குதல் நடத்தினர். இரு குழுவினரும் ஒருவரை ஒருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். மாலை 5 மணியளவில் துவங்கிய இந்த கொலைவெறி தாக்குதல், இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த தாக்குதலில் நான்காம் ஆண்டு மாணவர் பாரதிகண்ணன் (22) மூன்றாம் ஆண்டு மாணவர் ஆறுமுகம் (19) இரண்டாம் ஆண்டு மாணவர் அய்யாதுரை (20) நான்காம் ஆண்டு மாணவர் சித்திரைச்செல்வன் (22) ஆகிய நால்வரும் பலத்த காயமடைந்தனர். மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அரசு மருத்துவமனையிலும், சித்திரைச்செல்வன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காரணம் என்ன?: கல்லூரி மாணவர்கள், ஜாதி அடிப்படையில் இரு பிரிவாக பிரிந்து செயல்படுவதால், இந்தத் தாக்குதல் நடந்ததாக சில மாணவர்கள் தெரிவித்தனர். ஒரு வாரமாகவே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள திட்டமிட்டுள்ளனர். தகவல் அறிந்ததும், போலீசார் உஷாராகி கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கல்லூரி முதல்வர் உறுதி: சட்டக் கல்லூரி வளாகத்தில், ஆயுதங்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ், நிருபர்களிடம் கூறும்போது, ""இரண்டு பிரிவு மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்திற்குள் ஆயுதங்கள் கொண்டு வர அனுமதியில்லை. அனுமதியை மீறி கொண்டு வந்துள்ளனர். இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்படும். தவறு செய்த மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

கொதித்தெழுந்த பொதுஜனம்: சென்னை சட்டக் கல்லூரியில் இரண்டு பிரிவு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் உருட்டுக் கட்டை, கத்தி, டியூப் லைட், கற்கள், அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். தனியாக சிக்கிய மாணவர்களை, ஒரு கும்பல் கொடூரமாக தாக்கியது. நான்கு பேர் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இக்காட்சியை குறளகம் சாலையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் பார்த்தனர். மாணவர்களின் கொலைவெறித் தாக்குதல், போலீசார் முன்னிலையில் நடந்ததைக் கண்டதும், கடும் அதிருப்தியடைந்தனர். போலீஸ் அதிகாரிகளிடம் சென்று, "உங்கள் கண்ணெதிரிலேயே காட்டுத்தனமான தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது; இதை பார்த்தும், பார்க்காதது போல் இருக்கிறீர்களே? நீங்கள் எல்லாம் சட்டம், ஒழுங்கை எப்படி காப்பாற்றப் போகிறீர்கள்? நாங்கள் சாட்சிக்கு வருகிறோம். அவர்களை கட்டுப்படுத்துங்கள்' என ஆவேசமாக தெரிவித்தனர். மேலும், மாணவர்களைப் பார்த்தும் அங்கிருந்த மக்கள் சத்தம் போட்டனர். மாணவர்களும் திருப்பி சத்தம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார், மக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

சட்டக் கல்லூரி மாணவர்கள் 8 பேர் மீது வழக்கு: சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட எட்டு மாணவர்கள் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து, நேற்று பயங்கரமாக மோதிக்கொண்டனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த நான்கு பேர், மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ், எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி, இருதரப்பைச் சேர்ந்த மணிமாறன், ரவீந்திரன், சித்திரைச்செல்வன், குபேந்திரன், திலீப், வெற்றிச்செல்வன், ரவிவர்மன், பிரேம்குமார் ஆகியோர் மீது, கொலை முயற்சி, மிரட்டல், கலவரம் தூண்டுதல், ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்தனர். இரண்டாம் ஆண்டு மாணவர் திலீப்(22) கைது செய்யப்பட்டுள்ளார்.

சாலை மறியல்: தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே 50க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களை சமாதானம் செய்து, கலைந்து போகச் செய்தனர். அதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

நன்றி: தினமலர்

Pl. read: சட்டக்கல்லூரி - இட்லிவடை வன்முறை என்பது வெறும் இரத்தத்தின் தெறிப்பா?! --- Kuzhali
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் Blood sport --- Idlyvadai

Thursday, November 06, 2008

466. நீதிமன்றத்தில் வக்கீல்கள் செய்யும் காமெடி

வக்கீல்: அவளுக்கு 3 குழந்தைகள், சரியா ?
சாட்சி: ஆம்
வக்கீல்: எவ்வளவு மகன்கள் ?
சாட்சி: ஒன்று கூட கிடையாது
வக்கீல்: எவ்வளவு மகள்கள்?
சாட்சி: என்ன, என்னை நக்கல் செய்கிறீர்களா ? கனம் நீதிபதி அவர்களே, எனக்கு இந்த வக்கீல் தேவையில்லை, வேறு வக்கீலை ஏற்பாடு செய்ய முடியமா ????


வக்கீல்: உங்களின் முதல் திருமணம் எவ்வாறு முடிவுக்கு வந்தது ?
சாட்சி: மரணத்தின் வாயிலாக
வக்கீல்: யாருடைய மரணத்தினால்?
சாட்சி: தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் ????


வக்கீல்: அந்த நபரை விவரிக்க முடியுமா?
சாட்சி: அவர் நடுத்தர உயரமாக, தாடியும் வைத்து இருந்தார்.
வக்கீல்: அந்த நபர் ஆணா பெண்ணா ?
சாட்சி: நீங்கள் கண்டுபிடியுங்களேன் !?!?!


வக்கீல்: நான் உங்கள் வக்கீலுக்கு அனுப்பிய நோட்டீஸை முன்னிட்டுத் தானே, இக்காலையில் இங்கு தங்களின் தோற்றம் அமைந்தது?
சாட்சி: இல்லை, நான் பணிக்குச் செல்கையில் பொதுவாக இப்படித் தான் அலங்கரித்துக் கொள்வேன்!?!?


வக்கீல்: டாக்டர், எத்தனை பிரேதப் பரிசோதனைகள் தாங்கள் இறந்தவர்கள் மீது செய்து இருக்கிறீர்கள் ?
சாட்சி: என்னுடைய அனைத்து பிரேதப் பரிசோதனைகளும் இறந்தவர்கள் மீதே நடந்துள்ளன!!! அதே கேள்வியை சற்று மாற்றி அமைத்துக் கேட்க தங்களுக்கு விருப்பமா ?!?!


வக்கீல்: தங்களின் அனைத்து பதில்களும் வாய்மொழியாக இருத்தல் அவசியம், சரியா? நீங்கள் எந்தப் பள்ளிக்கு சென்றீர்கள்?
சாட்சி: வாய்மொழி!?!?!


வக்கீல்: தாங்கள் எத்தனை மணிக்கு பிரேதத்தை பரிசோதித்தீர்கள் என்பதை நினைவு கூர முடியமா?
சாட்சி: பிரேதப் பரிசோதனை இரவு 8.30 மணிக்குத் தொடங்கியது
வக்கீல்: திரு.ரகுராமன் அந்நேரம் இறந்து போயிருந்தாரா ?
சாட்சி: இல்லை, அவர் பரிசோதனை மேஜையின் மீது அமர்ந்தவாறு, நான் ஏன் இந்த பிரேதப் பரிசோதனையை அவர் மீது செய்து கொண்டிருந்தேன் என்ற ஆச்சரியத்தில் மூழ்கியிருந்தார் !?!?!

வக்கீல்: இந்த மையஸ்தேனியா கிராவிஸ் (myasthenia gravis) ஆனது தங்களின் நினைவாற்றலை பாதிக்குமா?
சாட்சி: ஆம்
வக்கீல்: எவ்வகையில் அது தங்கள் நினைவாற்றலை பாதிக்கிறது ????
சாட்சி: எனக்கு மறதி ஏற்படுகிறது !!!
வக்கீல்: ஓ மறதியா ? நீங்கள் மறந்தது குறித்து ஏதாவது எடுத்துக்காட்டு தர இயலுமா ?!?!?!

வக்கீல்: காலை எழுந்தவுடன் உங்கள் கணவர் உங்களிடம் என்ன கேட்டார் ?
சாட்சி: அவர், "சுசீலா, நான் எங்கிருக்கிறேன்?" என்றார்
வக்கீல்: அக்கேள்வி தங்களை ஏன் கோபம் கொள்ள வைத்தது?
சாட்சி: ஏனெனில், என் பெயர் ஜானகி !?!?!


கீழுள்ளது தான் best of the best :)

வக்கீல்: டாக்டர், தாங்கள் பிரேதப் பரிசோதனையைத் துவங்குவதற்கு முன், நாடித்துடிப்பை கவனித்தீர்களா ?
சாட்சி: இல்லை
வக்கீல்: ரத்த அழுத்தத்தை சோதித்தீர்களா ?
சாட்சி: இல்லை
வக்கீல்: சுவாசம் உள்ளதா என்று பார்த்தீர்களா ?
சாட்சி: இல்லை
வக்கீல்: எனவே, தாங்கள் பிரேதப் பரிசோதனையைத் தொடங்கிய சமயம், அந்த நோயாளி உயிரோடு இருந்திருக்கக் கூடிய சாத்தியம் உள்ளது, அப்படித் தானே ?
சாட்சி: இல்லை
வக்கீல்: எப்படி அதை அவ்வளவு நிச்சயமாக உங்களால் கூற முடிகிறது ?
சாட்சி: ஏனெனில், அம்மனிதரின் மூளையானது எனது மேஜையின் மீதிருந்த ஒரு குடுவைக்குள் அமர்ந்திருந்தது !?!?
வக்கீல்: ஓ அப்படியா? இருந்தும், அபோது அந்த மனிதர் உயிரோடு இருந்திருக்க சாத்தியமா???
சாட்சி: உண்டு, அம்மனிதர் உயிரோடு இருந்திருக்கவும், சட்டம் பயின்று கொண்டிருக்கவும் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவே உணர்கிறேன் !?!?!?


பி.கு: மேற்கூறப்பட்டவை எல்லாம், அமெரிக்க நீதிமன்றங்களில் நிஜமாகவே பேசப்பட்டவை என்பதை தயவு செய்து நம்புங்கள் :) வக்கீல்கள் எப்பேர்ப்பட்ட புத்திசாலிகள் என்று உங்களுக்கு ஒரு ஐடியா கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன் ;-)

எ.அ.பாலா

நன்றி: Disorder in the American Courts

Wednesday, November 05, 2008

465. ரஜினி மன்னிப்பு கேட்கணும்...குரல் உயர்த்தும் இந்துமத அமைப்புகள்

வாலு போயி கத்தி வந்திச்சு டும்டும்டும்... ராமர் பாலம் பிரச்சனையே இன்னும் முடியவில்லை. அதற்குள், பகவத் கீதையை அவமானப்படுத்தி விட்டார் ரஜினி என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் சிலர். தலைக்கு ஹெல்மெட் மாதிரி வாய்க்கு ஏதாவது ஹெல்மெட் இருந்தால் சொல்லுங்க என்கிற அளவுக்கு வெறுத்து போயிருக்கிறார் ரஜினி.

'கடமையை செய், பலனை எதிர் பார்' இப்படி ஒரு ஸ்லோகனுடன் தனது ரசிகர்களை சந்தித்தார் ரஜினி. அப்போது, பகவத் கீதையில் கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என்று கண்ணன் சொன்னதில் எனக்கு உடன்பாடில்லை என்ற ரீதியில் கருத்து சொல்லப் போக, கொதித்து எழுந்துவிட்டார்கள் சில இந்து மத அமைப்பினர்.

கருத்து சுதந்திரத்தை குருத்தோடு வெட்டிப்போடும் இவர்கள், இப்போது தனது பேச்சுக்காக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் போட ஆரம்பித்திருக்கிறார்கள். பதில் சொல்ல வேண்டிய ரஜினி இந்நேரம் எந்த தேசத்தில் இருக்கிறாரோ?
 

நன்றி: tamilcinema.com

என்னப்பா நியாயம் இது ?!?! கண்ணன் சொன்னதில நம்பிக்கை இல்லன்னு சொல்றதுக்குக் கூட கருத்துச் சுதந்திரம் கிடையாதா ?  என்ன ஒரு சகிப்புத்தன்மையற்ற மாசுச் சூழல் :( 

Monday, November 03, 2008

சுஜாதாவின் அட்வைஸை மதிக்காத பதிவர் பினாத்தல் சுரேஷ்- by கி அ அ அனானி

கி அ அ அனானியிடமிருந்து மடல், அரசியல் கலக்காத சாத்வீகமான மேட்டர் for light reading :) . யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
எ அ பாலா
************************************

எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்தில் சின்னச் சின்ன விஷயங்களை அனுபவ பூர்வமாகவும் ,சுவையாகவும் படிப்பவருக்கு பயனுள்ள வகையிலும் சொல்லும் ஆற்றல் இருக்கும்। உதாரணத்துக்கு 1997 ல் "சுஜாதாட்ஸ்"என்ற கட்டுரைத் தொகுப்பில் சென்னை ட்ராபிக் பற்றி தனக்கே உரிய பாணியில் சுவையாக எழுதியிருக்கிறார் (5/11/08 தேதியிட்ட குமுதத்தில் வந்திருக்கிறது) அதில்

" எந்த ட்ராஃபிக் விளக்கிலும் ஒரு பல்ப்பாவது எறியாது।அம்பர்-மஞ்சள் இருந்தால் மிக வேகமாகப் போகலாம்.ஆனால் ஒரு கண்டிஷன்.பாதியில் சிகப்பு வந்தால் மென்னியைப் பிடிப்பது போல் பிடேக் போடாதீர்கள்.உமக்குப் பின்னால் மூணு பேர் உம்மை நம்பி அதே வேகத்தில் வந்து கொண்டிருப்பார்கள்.பகவான் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு போய்க் கொண்டே இருங்கள்"

என்று எழுதியிருந்ததைப் படித்ததும் இந்த உபதேசத்தைப் பின்பற்றாமல் சமீபத்தில் கோயம்பேடு சிக்னலில் நல்ல பிள்ளையாய் ப்ரேக் அடித்து கழுத்தெலும்பை உடைத்துக் கொண்ட பினாத்தல் சுரேஷ்

ஞாபகம்தான் வந்தது . :)

பினாத்தலாரே..சுஜாதாவை படிச்சா மட்டும் போதாது..அட்வைசை ஃபாலோவும் பண்ணணும் :)

சென்னை ட்ராபிக் பற்றி சுஜாதா அதே கட்டுரையில் எழுதியிருக்கும் இன்னும் சில விஷயங்கள்
************************************

சென்னை போக்குவரத்துக்கென்று சில தனிப்பட்ட எழுதப்படாத விதிகள் இருக்கின்றன.அவைகளை சென்னையின் சாலைகளை பயன்படுத்துவோர் அறிந்து கொள்வது முக்கியம்.எந்த நிமிடமும் நீங்கள் கீழ்க்காணும் நிகழ்ச்சிளை சாலையில் எதிர்பார்க்கலாம்.

திடீர் என்று எதையோ மறந்து விட்ட சைக்கிள்காரர் சரேல் என்று திரும்பி "யு" டர்ன் அடிப்பது

பஸ்களின் பின்பக்க வாசலிலிருந்து எந்த தருணத்திலும் எந்த வேகத்திலும் பயணிகள் உதிர்ந்து,கொஞ்ச தூரம் ஓடி சமாளிப்பார்கள்.அவர்கள் மேல் உங்கள் வாகனத்தை ஏற்றி விடக் கூடாது.

ஆட்டோ ரிக்ஷாக்கள் காட்டும் கை சிக்னல்கள் ஏறக்குறைய மனசுக்குள்தான் இருக்கும்.அரிதாக ஒரு விரல் மட்டும் காட்டி விட்டு சரேல் என்று திரும்புவார்கள்.உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.பஸ் எப்போதும் எங்கேயும் நிற்கும்.பஸ் நிறுத்தத்தில் மட்டும் அவை நிற்க்க வேண்டும் என்றில்லை.அப்படி நின்றாலும் நடுத்தெருவில் நிற்கும்.

எந்த சாலை விபத்திலும் பெரிய வண்டிதான் குற்றவாளி.,பாதசாரி-சைக்கிள் விபத்தில் சைக்கிள்காரர்தான் காரணம்,சைக்கிள்-ஸ்கூட்டரில் ஸ்கூட்டர்தன்,ஸ்கூட்டர் ஆட்டோவில் ஆட்டோ,ஆட்டோ-கார் என்றால் கார்,கார் -பஸ் என்றால் பஸ்,பஸ் -ரோடு இஞ்சின் என்றால் ரோடு இஞ்சின்.

தண்ணீர் லாரிகளும் சைலன்சர் இல்லாத கார்ப்பரேஷன் குப்பை லாரிகளும் தனிச்சையாக இயங்குபவை.அவர்களுக்கு எந்த ரூலும் கிடையாது.

************************************


இந்த 2008 ஆம் ஆண்டில் இன்னும் பொது மக்களைக் கொலை நடுங்க வைக்க "ஷேர் ஆட்டோக்களும்" சேர்ந்து கொண்டுள்ளன என்பது தவிர வேறு ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்ன? :)

கி அ அ அனானி

Sunday, November 02, 2008

463. நகைச்சுவை வித்தகர் சோ - காபி வித் அனு

நேற்றிரவு விஜய் டிவி ஒளிபரப்பிய 'காபி வித் அனு' நிகழ்ச்சியில் சோ அவர்களும், மௌலி அவர்களும் கலந்து கொண்டு ஒரு கலக்கு கலக்கினார்கள். எதிர்பார்த்தது போல, டோ ண்டு சார் இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு நீண்ட பதிவு போட்டு தனது 'சோ அபிமானத்தை' மற்றொரு முறை நிரூபித்து விட்டார் ;-) எனவே நான் ஒரு மினி அலசலோடு நிறுத்திக் கொள்கிறேன்!

சோ அவர்களுக்கு satirical / subtle வகை நகைச்சுவை இயல்பாக அமைந்துள்ள ஒரு சங்கதி. அதனால், பார்ப்பவரை அவரால் எளிதில் கட்டிப்போட்டு விட முடிகிறது, அவரைப் பிடிக்காதவர்களைக் கூட :) அவர் பேசியதிலிருந்து சில துளிகள்:

1. யாரோ ஒருவர் சோவை, அவர் வாக்கிங் போகிறாரா என்றதற்கு, அவருக்கே உரித்தான பாணியில், "இல்லை டாக்கிங் மட்டும் தான் போய்க் கொண்டிருக்கிறது" என்றாராம்!

2. அவரது நண்பர் ரங்கா என்பவர் அவரை வற்புறுத்தி ஒரு முறை காலை வாக்கிங்குக்கு அழைத்துச் சென்றாராம். கொஞ்சம் நடந்தவுடனேயே, சோவுக்கு போரடித்து விட்டது. அச்சமயம், அவ்வழியில் நாய் ஒன்று (அவர்களுக்கு முன்னால்) கொஞ்ச தூரம் ஓடிச் சென்று மீண்டும் திரும்பி வந்ததை சோ ரங்காவிடம் காண்பித்து, "ரங்கா, இந்த நாய்க்கும் நமக்கும் இப்ப ஒரு வித்தியாசமும் இல்ல!" என்று சொல்ல அப்செட் ஆன ரங்கா மறந்து கூட சோவை வாக்கிங்குக்கு அழைப்பதில்லையாம் ...

3. அது போலவே, ஒழுங்காக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நண்பர் ஒருவரிடம் சோ அவர்கள், நல்ல உடற்கட்டு கொண்டவர்கள் ஒரு போது சாதனையாளர்களாக இருந்ததில்லை என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டு அதோடு, 'ஒரு மனிதனுக்கு ஒன்று கட்டான உடலமைப்பு இருக்க முடியும் அல்லது அறிவாற்றல் இருக்க முடியும், இரண்டும் சேர்ந்து அமைய வாய்ப்பே கிடையாது' என்று சோ நண்பரை மேலும் குழப்பி விட நண்பர் உடற்பயிற்சியை நிறுத்தி விட்டாராம் :)

4. நிகழ்ச்சியின் விளம்பர இடைவேளை ஒன்றுக்கு முன்னால் அனு, சோ மற்றும் மௌலியிடம், "நீங்க ரெண்டு பேரும் நான் சொல்ற டாபிக்ல பேசணும், இப்ப ஒரு சின்ன கமர்ஷியல் பிரேக்" என்றவுடன் சோ, "நீங்க சொல்ற டாபிக்ல பேசணும், நீங்க சொல்றபோது பிரேக், எல்லாம் ஒரே பொம்பளை ராஜ்ஜியமா இருக்கு!" என்று அனுவை ஒரு போடு போட்டது அருமை :)

5. சோ மௌலியையும் விட்டு வைக்கவில்லை! மௌலி தான் நாடகம் எழுத வந்ததற்கு சோ தான் இன்ஸ்லிரேஷன் என்றும், சோவைப் பார்த்து தான் தனக்கு தன்னம்பிக்கை வந்தது என்றும் கூறியபோது இடைமறித்த சோ, 'இவனே (சோ) நாடகம் போடும்போது தன்னால் முடியாதா என்ன என்பதைத் தான் மௌலி மிகவும் பாலிஷாகக் கூறுவதாக' மௌலியை வாரியது ரசிக்கத் தக்கது!

6. அது போலவே, சோ கடந்த 25 வருடங்களாக 'அதே மாதிரி' இருப்பதை மௌலி ஒரு பாராட்டாகக் கூற, சோ அனுவிடம், "கடந்த 25 வருடங்களாக என்னிடம் எந்த improvement-ம் இல்லை என்பதை மௌலி எத்தனை நாசூக்காகச் சொல்கிறார், பாருங்கள்" என்று கூறி ஒரு ஸிக்ஸர் அடித்தார் :)

7. மௌலி, விசு, கே.பி ஆகிய மூவரும் நாடக உலகிலிருந்து சினிமாவுக்குச் சென்று, வெகு விரைவாகவும் எளிதாகவும் அதன் நுணுக்கங்களையும், நெளிவு சுளிவுகளையும் கற்றுத் தேர்ந்து விட்டதையும், தான் அவர்கள் போல வெற்றி பெற இயலவில்லை என்றும் நினைவு கூர்ந்தார்.

8. திருப்பி வைக்கப்பட்ட (பிரபலங்களின்) புகைப்படங்களில் மூன்றைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பற்றி (கா.வி.அ) நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட விருந்தினர் பேச வேண்டிய பகுதி உள்ளது. சோ முதலில் ஜெய்சங்கரின் போட்டோவை எடுத்தார். தனது சிறந்த நண்பர், பரோபகாரி, பல தயாரிப்பாளர்களை உருவாக்கியவர், An actor by his own right என்றும் ஜெய்யை மிகவும் சிலாகித்துப் பேசினார்.

அடுத்து சோ எடுத்தது, ஜெயலலிதாவின் போட்டோவை! எடுத்தவுடன், "நமக்குன்னு வருது பாருங்க!" என்று தமாஷ் பண்ணிவிட்டு, தான் அவரை பலமுறை விமர்சித்திருப்பதை சுட்டிக் காட்டி விட்டு, இந்தியாவில் உள்ள பெண் அரசியல்வாதிகளிலேயே திறமையானவர் ஜெயலலிதா என்றும், ஜெவின் courage, confidence, knowledge, administrative abilities ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது அவர் அரசியலில் இன்னும் உயரத்துக்கு செல்ல முடியும் என்றார் !

அடுத்து ஆச்சி மனோரமாவை மிகவும் பாராட்டிப் பேசினார். மனோரமா அன்றிலிருந்து இன்று வரை திரையுலகில் பிரகாசிப்பதைச் சுட்டிக் காட்டி, நடிப்புக்கு ஆண்களில் சிவாஜி என்றால், பெண்களில் மனோரமாவாகத் தான் இருக்க முடியும் என்றார் சோ. நாகேஷின் திறமையையும் மனம் திறந்து பாராட்டினார். அது போல, டி.ஆர். ராமச்சந்திரனுக்குப் பிறகு, சாதாரண தோற்றமுடைய ஒருவர், காமெடி ஹீரோவாக வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்தவர் பாண்டியராஜனே என்று அவரையும் பாராட்டினார்.

9. கலைஞர் பற்றிக் கேட்டபோது, மிகச் சாதாரண நிலைமையிலிருந்து இத்தனை உயரத்தை அவர் அடைந்ததற்கு அவரது கடுமையான உழைப்பும், சாமர்த்தியமும் காரணங்கள் என்றார். அது போல, ரஜினி பல விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசாவிட்டாலும், ஒவ்வொரு விஷயம் பற்றியும் ரஜினிக்கென்று ஒரு தெளிவான கருத்துள்ளதாகவும் சோ குறிப்பிட்டது சற்று ஆச்சரியத்தை வரவழைத்தது ! "ரஜினி வேண்டுமா, கமல் வேண்டுமா?" என்ற கேள்விக்கு, தான் யாருக்கும் வெறிபிடித்த ரசிகன் இல்லை என்பதால் தனக்கு இருவருமே வேண்டும் என்று அரசியல்வாதி ஸ்டைலில் சோ எஸ்கேப் :)

10. நிகழ்ச்சிக்கு சோ தந்த Finishing Touch மறக்க முடியாதது ! அனு சோவிடம், "இந்த நிகழ்ச்சியின் காபி அவார்டை யாருக்கு, எதற்காகக் கொடுப்பீர்கள்?" என்று வினவியதற்கு சோ, எதையும் குடும்பத்தினருக்கே தர வேண்டும் என்ற தற்போதைய தமிழக நடைமுறையின்படி தான் நடக்க விரும்புவதால், அந்த அவார்டை தனது பேத்திக்கே அளிக்க விருப்பமென்றும், "ஊரோடு ஒத்து வாழ வேண்டும்" என்பதும் அதற்குக் காரணம் என்றும் சொல்லி, ஜெயசூர்யா ஸ்டைலில் பாயிண்ட் பவுண்டரி மேல் ஸிக்ஸர் அடித்தபோது, அனுவும் மௌலியும் சிரிப்பை அடக்க சற்று சிரமப்பட்டதென்னவோ நிஜம் :)

சோ அத்தோடு விட்டாரா! தன் 9 வயது பேத்தி நன்றாக 'கவிதை' எழுதுகிறாள், ஆனால் ஆங்கிலத்தில் எழுதுகிறாள் என்று கங்குலி ஸ்டைலில் டைமிங்காக ஒரு ஷாட் அடித்தது சூப்பர் !

இது போல ஒரு 'காபி வித் அனு' நிகழ்ச்சியை இதுவரை பார்த்ததில்லை. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. Yesterday, it was a real one man show !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, November 01, 2008

462. ஈழத்தமிழர் பிரச்சினையும் நடிகர்கள் உண்ணாவிரதமும் - கி.அ.அ.அனானி

ரொம்ப நாட்களுக்குப் பிறகு கி.அ.அ.அனானியிடமிருந்து மடல், என்ன என்று பார்த்தால் மேட்டர் சுடச்சுட இன்று நடந்த (இலங்கைத் தமிழர் நலனுக்காக) திரையுலக உண்ணாவிரதப் போராட்டம் பற்றி ! கி.அ.அ.அ வின் finishing touch அருமை. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
************************************
ஈழத் தமிழர் பிரச்சினையை மையமாக வைத்து தமிழ் திரைப்பட நடிகர்கள்(தென்னிந்திய திறைப்பட நடிகர் சங்கம் சார்பாக) இன்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்து தங்களது உணர்வை வெளிப்படுத்தினர்.

அதை சன் தொலைக் காட்சி முழு நாளும் நேரடி ஒளிப்பதிவு செய்தது. முழுவதும் காணக் கூடிய சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்றாலும் அங்கங்கே பார்த்தவற்றிலிருந்து சில துணுக்குகள்

-நடிகர் சங்க வளாகத்துக்குள்ளாகவே உண்ணா விரதத்தை நடத்த முடிவு செய்து அதை திறம் பட நடத்தவும் செய்திருந்தார்கள் (நடிகர் சிவக்குமார் சொன்ன யோசனையின் பேரில் என்றார்கள்,(--always a sensible actor, Weldone Sivakumar).ராதாரவி திறம்பட காம்பையரிங் செய்து கொண்டிருந்தார்.

-முதலிலேயே அதிகம் controversial யான கருத்துக்களை பேச வேண்டாம் என்று சங்கத்தின் வாயிலாக சொல்லிவிட்டிருந்த படியால், அனைவருமே ஒரு வரம்புக்கள்தான் பேசினார்கள்.அதனால் யார் அதிக தமிழ் இன மான உணர்வை வெளிப்படுத்துகிறார்கள் என்பது போல் தொடங்கி போட்டி போட்டுக் கொண்டு உளரும் அபத்தங்கள்(பார்த்த வரை) குறைவாகவே இருந்தது.

-மன்சூர் அலிகான் எங்கு பேசினாலும்(ராமேஸ்வரத்திலும் கூட) பெண்கள் கற்பழிக்கப் படுவது பற்றியே பேசுவது coinsidense-ஆ அல்லது தனக்கு நன்கு பழக்கப் பட்ட subject-ஐ பேசுகிறார் என்று கொள்ளவேண்டுமா?

-விஜய் தனது லட்சோபலட்சம் ரசிகர்களையும் போர் நிருத்தத்தை வலியுருத்தச் சொல்லி பிரதமருக்கு தந்தி அடிக்கச் சொன்னார். பிறகு தனக்கு அத்தனை ரசிகர்கள் இல்லை என்று நினைத்தாரோ என்னவோ என் ரசிகர்கள் மட்டுமல்ல எல்லோரும் தந்தியடிக்கலாம் என்று கேட்டுக் கொண்டார்- கலைஞர் சொன்ன போது நீங்க போஸ்ட் ஆபிஸ் போய் தந்தி அடிச்சீங்களா விஜய் ?

-சத்தியராஜ் ஈழத்தில் தமிழர்கள் சாவது குண்டு மழையால் இல்லை, மூப்பினாலும்,கேன்சரினாலும் என்று எதிர்மறையாக காமெடி செய்து பொருள் விளங்க வைக்க முயன்று தோற்றுப் போனது பரிதாபமாக இருந்தது. உணர்ச்சிகளைக் கொட்டும் போது கொஞ்சம் அப்படி இப்படி எல்லை மீறத்தான் செய்யும் என்று கைதான இயக்குனர்களுக்கு வக்காலத்து வாங்கியவரை " உணர்ச்சிகளை கட்டுப் படுத்துபவன்தான் மனிதன்" என்று ரஜினிகாந்த் பேசும்போது போகிற போக்கில் மறைமுகமாக குட்டியது.. பாவம் புரிந்ததோ புரியவில்லையோ?

-ரஜினி " ஒரு நாட்டில் பொது ஜனங்களை கஷ்டப் படுத்தினால்,ஏழை எளிய மக்கள் கண்ணீர் விட்டால், அவர்களது பெருமூச்சில் அந்த நாடு உருப்படாமல் போகும்" என்று சொல்லும் போது அவர் ஈழத்தமிழர் நிலை குறித்து சொல்கிறாரா அல்லது தமிழகத்தில் விலைவாசி மின்வெட்டு போன்றவற்றால் அவதிப் படும் தமிழனின் பெருமூச்சு பற்றி "கடவுளாலும் காப்பாற்ற முடியாது " போல வாயிஸ் கொடுக்கிறாரா என அனைவரும் ஒரு நிமிடம் திகிலுடன் பார்த்தது நிஜம்.

- எஸ் ஜே சூரியா பேசும் போது ஈழத் தமிழர்களையெல்லாம் தமிழ் நாட்டில் குடியமர்த்தி விடலாம் என யோசனை சொன்னார் - (இவ்வளவு அப்பாவியா நீங்க எஸ் ஜே சூர்யா இல்லைனா தமிழனை வச்சு கமெடி கீமெடி ஏதும் பண்ணுறீங்களா?)

- தல "அஜித்" எப்படா பேசக் கூப்பிடுவார்கள் என்பது போலக் காத்திருந்து " எங்களை எங்க வேலையைச் செய்ய விடுங்கள்' என ஒற்றை வரியில் பன்ச் வைத்து விட்டு உட்கார்ந்தார்- வேணுங்குற எடத்துல பேச மாட்டிங்கிறீங்க, வேண்டாத எடத்துல வாயக் குடுத்து மாட்டிக்கிறீங்களே,தல ?

-திருமாவளவன் பேசும் போது, இலங்கையில் தமிழர்கள் பூர்வ குடிகள், சிங்களவர்கள்தான் (ஒரிசாவிலிருந்து) வந்த வந்தேரிகள். மேலும் இந்தியா தமிழர்களை பாதுகாக்க வேண்டும் ஏனெனில் "தமிழர்கள் அனைவரும் இந்துக்கள்" என்று சொன்னார்(இது சொன்னது திருமாதானா வேறு யாராவதா என எனக்கு ஒரு சதவிகித டவுட் உள்ளது, யாராவது கன்ஃபார்ம் பண்ணினால் தேவலை)- அப்படியா திருமா? தமிழ் வலயுலகுல நிறையப்பேர் அப்படி இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க,அதுனால கூடிய சீக்கிரம் உங்களுக்கும் "வந்தேறி"ப் பட்டம் கிடைக்க வாய்ப்புள்ளது.

-கமல் பேசும் போது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் ,உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடாது என வார்த்தை ஜாலம் காட்டினார். பேசிக் கொண்டிருக்கும் போது நடுவில் பழ.நெடுமாறன் மேடைக்கு வந்ததால் பேச்சை நிறுத்தியவர்" நான் பேச்சை நிறுத்தியது கேட்பவர் கவனம் சிதரியதென்பதற்காக அல்ல, பெரியவர் நெடுமாறனுக்கு உரிய மரியாதை வணக்கம் செய்ய வேண்டுமே என்பதற்காத்தான் என்று சமாளித்தார். நிவாரணத்திற்கு ஐந்து லட்சம் அறிவித்தவர் வீட்டுக்குப் போய் அனுப்புவதாக சொன்னார் :)

இதெல்லாம் தவிர

-வழக்கம் போல் சன் டீவி ஃபுல் கவரேஜ் கொடுத்து அட்வர்டைஸ்மெண்டுகளுடன் நிகழ்ச்சியை ஒளிபரப்பி தன் கலெக்'சன்'னை பார்த்துக் கொண்டது.

-வழக்கம் போல் தமிழ் மகா சனங்கள் திரை நட்சத்திரங்களைக் காண கூட்டமாக வந்து "திருப்பதி சாமி தரிசனம்" செய்வது போல் முண்டியடித்துப் போய்க்கொண்டிருந்தார்கள்.

-வழக்கம் போல் முன்னணி நடிகையர் அலங்காரமாக வந்து சும்மா உட்கார்ந்து ஈழத்தமிழர் பிரச்சினை பற்றியெல்லாம் தங்களுக்கு ஏதும் தெரியாது என்பதை வெளிப்படையாக காட்டிக் கொண்டிருந்தார்கள்.

-வழக்கம் போல் இன்றும் சிங்கள ராணுவம் , விடுதலைப் புலிகள் மற்றும் தமிழர் குடியிருப்புப் பகுதியில் தாக்குதல் நடத்தியது

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails